இந்தோனீசியாவில் மாது ஒருவரை விழுங்கிய மலைப்பாம்பு கொல்லப்பட்டு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமத்ரா தீவில் உள்ள ஜாம்பி எனும் மாநிலத்தில் ரப்பர் மரம் வெட்டி வாழ்ந்துவந்தார் ஜாரா எனும் 54 வயதான மாது. சில தினங்களுக்கு முன் அவர் வழக்கமாக செல்லும் ரப்பர் தோட்டத்துக்குச் சென்றார். பொழுது சாய்ந்தும் அவர் வீடு திரும்பாத நிலையில் அவரை தேடி அவரது கணவர் தோட்டத்துக்குச் சென்றார். ஜாராவின் காலணி, தலையங்கி, மேல் ஆடை, அவர் பயன்படுத்தும் அரிவாள் ஆகியவை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் ஜாராவை தேடினர்.
ஜாரா காணாமல்போன அடுத்த நாளான அக்டோபர் 24ஆம் தேதி, மலைப்பாம்பு ஒன்றை ஊர் மக்கள் கண்டனர். அதன் வயிற்று பகுதி புடைத்துகொண்டிருந்ததால், ஜாரோவை மலைப்பாம்பு விழுங்கியிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்தது.
ஊர் மக்கள் மலைப்பாம்பை பிடித்து அதை கொன்றனர். அதன் வயிற்றை அறுத்து பார்த்தபோது, ஜாராவின் சடலம் அதில் கண்டெடுக்கப்பட்டது.
மலைப்பாம்புகள் மனிதர்களை விழுங்கும் ஆற்றல் கொண்டிருந்தாலும் அவ்வாறு நடப்பது மிக அரிது.


