பெய்ஜிங்: சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
வூஹான் நகரிலிருந்து நாட்டின் வடமேற்கில் உள்ள சினிங் நகர் வரை உள்ள பல நகரங்கள் அவற்றின் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன.
கட்டடங்களை மூடுவது, மாவட்டங்களில் முடக்கநிலையை அறிவிப்பது போன்ற நடவடிக்கைகளில் நகரங்கள் இறங்கியுள்ளன.
கிருமிப் பரவலைத் தடுக்க சீனா மேற்கொள்ளும் இத்தகைய தீவிர நடவடிக்கைகளால் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று நாள்களாக சீனாவில் புதிதாக 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 அறவே இல்லாத நிலையை அடைய இலக்கு கொண்டுள்ள சீனா, பாதிப்பு அதிகரிக்கும் போதெல்லாம் கட்டுப்பாடு
களை மேலும் கடுமையாக்குகிறது.
பொருளியல் அடிப்படையில் சீனாவின் நான்காவது ஆகப் பெரிய நகரமான குவாங்சோவில் கூடுதல் தெருக்கள் மூடப்பட்டன.
குடியிருப்பு வட்டாரங்களில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 அபாயம் அதிகம் உள்ள இடங்கள் எனக் கருதப்படும் பகுதிகளில், வீட்டிலேயே இருக்கும்படி மக்களுக்கு சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பல இடங்களில் பள்ளிகளும் பொழுதுபோக்கு மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

