செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9ed3392d-696b-4139-825e-a20721d97d81
-

ஈரான்: தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்

துபாய்: ஈரானில் உள்ள ஷியா வழிபாட்டுத் தலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசேன் அமிராப்டோலாஹியியான் சூளுரைத்துள்ளார்.

ஷிராஸ் நகரில் உள்ள ஷா செராக் வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் மாண்டனர். நாட்டின் அமைதியை சீர்குலைக்கவும் நிலையற்றத்தன்மையை ஏற்படுத்தவும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. தாக்குதல் நடத்திய துப்பாக்கிக்காரனைக் கைது செய்துவிட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

உணவகங்கள் இயங்கும் நேரத்தை நீட்டிக்கும் ஹாங்காங்

ஹாங்காங்: கொவிட்-19 கட்டுப்பாடுகளை ஹாங்காங் மிகக் கவனமாக, படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. அதன்படி உணவகங்கள், மதுபானக்கூடங்கள் ஆகியவை இயங்கும் நேரத்தை அது நீட்டித்துள்ளது.

உணவகங்களுக்கும் மதுபானக்கூடங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த நேர வரம்பு அடுத்த மாதம் 3ஆம் தேதியிலிருந்து நீக்கப்படுகிறது. தற்போதைய விதிமுறைகளின்படி நள்ளிரவுக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் உணவகங்களில் உணவருந்த முடியாது. மதுபானக் கூடங்கள் பின்னிரவு 2 மணிக்குள் மூடிவிட வேண்டும்.

இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டாலும் உணவகங்களில் உள்ள ஒவ்வொரு மேசையிலும் அதிகபட்சம் 12 பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம் என்ற விதிமுறை தொடர்கிறது. அதேபோல மதுபானக்கூடங்களில் ஒவ்வொரு மேசையிலும் அதிகபட்சமாக ஆறு பேர் அமரலாம்.

விமானியின் சமயோசித புத்தியால் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது

பிரின்சாங்: கனமழை, மூடுபனி ஆகியவை காரணமாக மலேசியாவின் கேமரன் மலையில் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் விழுந்து நொறுங்கியது. ஆனால் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு தமது நண்பருடன் தொடர்புகொண்டு தாம் இருக்கும் இடத்தை அவரிடம் ஹெலிகாப்டர் விமானி தெரிவித்தார்.

அந்த நண்பருக்குக் கிடைத்த இந்தத் தகவலைப் பயன்படுத்தி விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரின் இருப்பிடத்தை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதன் காரணமாக ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். கிளந்தான் மாநிலத்தில் உள்ள குவா மூசாங் மாவட்டத்திலிருந்து பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவுக்கு ஐந்து மருத்துவ ஊழியர்களை விமானியான 43 வயது கேப்டன் எட்ஸ்‌ரீல் நூராசாம் கொண்டு சென்றபோது விபத்து நிகழ்ந்தது.