டுவிட்டரை $62 பில்லியனுக்கு வாங்கிய எலான் மஸ்க்; டுவிட்டரின் உயர் அதிகாரிகள் பணி நீக்கம்

டுவிட்டரை $62 பில்லியனுக்கு வாங்கிய எலான் மஸ்க்; டுவிட்டரின் உயர் அதிகாரிகள் பணி நீக்கம்

2 mins read
e4f67703-eead-4e17-a6b5-221245da20e3
-

டுவிட்டர் நிறுவனத்தை, $62 பில்லியன் (44 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவில் வாங்கியுள்ளார் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்.

மேலும் நிறுவனத்தை வாங்கிய கையோடு டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்துள்ளார் மஸ்க்.

கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க்.

அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்குவதாக அறிவித்தார். பின்னர் சில வாரங்களிலேயே அதில் இருந்து பின் வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 28-க்குள்(இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.

இந்த நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரானார் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார்.

விரைவில் இதுகுறித்த முழுவிவரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.