டுவிட்டர் உரிமையாளரானவுடன் உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தார் எலன் மஸ்க்
சான் ஃபிரான்சிஸ்கோ: உலகின் ஆகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டர் உரிமையாளராகியதை வித்தியாசமான முறையில் தொடங்கியுள்ளார்.
இவர் பொறுப்பேற்ற உடனேயே அந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கினார். எனினும், தம் இலக்குகளை எவ்வாறு எட்டுவோம் என்பது பற்றி திரு மஸ்க் விவரிக்கவில்லை.
டுவிட்டரை US$44 பில்லியனுக்கு (S$62 பி.) கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, "பறவை விடுவிக்கப்பட்டுள்ளது" என்று திரு மஸ்க் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
டுவிட்டரில் எவையெல்லாம் பதிவேற்றம் செய்யப்படலாம் என்பது குறித்த வரம்புகளைக் குறைக்க இவர் விரும்புகிறார்.
என்றாலும், வெறுப்புணர்வும் பிரிவினைவாதமும் டுவிட்டரில் மேலோங்குவதைத் தவிர்க்க தாம் விரும்புவதாகவும் இவர் குறிப்பிட்டார்.
வேலைகளைக் குறைக்க தாம் திட்டம் கொண்டுள்ளதாவும் திரு மஸ்க் கூறியிருப்பது, டுவிட்டரின் ஏறக்குறைய 7,500 ஊழியர்களுக்கு எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக தாம் டுவிட்டரை வாங்கவில்லை என்றும் தாம் விரும்பும் மனிதகுலத்திற்கு உதவவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இவர் சொன்னார்.
டுவிட்டர் தலைமை நிர்வாகி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்ட விவகாரம் மற்றும் கொள்கை தலைவர் விஜய கட்டே ஆகியோரை திரு மஸ்க் பணிநீக்கம் செய்தார்.
டுவிட்டரில் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை குறித்து தம்மையும் டுவிட்டர் முதலீட்டாளர்களையும் தவறாக வழிநடத்தியதாக திரு மஸ்க் அவர்கள் மீது குற்றம் சாட்டினார்.
ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்டபோது திரு அகர்வாலும் திரு சேகலும் டுவிட்டரின் சான் ஃபிரான்சிஸ்கோ தலைமையகத்தில் இருந்தனர் என்றும் பின்னர் அவர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் இந்த விவகாரம் பற்றி அறிந்த சில கூறினர்.
டுவிட்டரை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து அதன் தலைமை நிர்வாகியாக திரு மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
பயனாளர்களுக்கு விதிக்கப்படும் நிரந்தரத் தடையை நீக்கவும் இவர் விரும்புகிறார்.