மாஸ்கோ: உக்ரேன் மீது போர் தொடுத்து வருவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (படம்) வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக, ரஷ்யாவின் 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' அதன் இலக்குகளை எட்டி வருவதாகவும் உலக விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற திரு புட்டினிடம், கடந்த ஓராண்டில் தமக்கு ஏமாற்றம் எதுவும் ஏற்பட்டதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு "இல்லை" எனப் பதிலளித்த அவர், உக்ரேனில் உயிர் நீத்த ரஷ்யர்களைப் பற்றி தாம் எப்போதும் சிந்தப்பதாகக் கூறினார்.
"நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் உள்ளோம். நமக்கு முன்னால் இருப்பது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகவும் ஆபத்தான, முன்னறிந்து கூறமுடியாத, அதேவேளையில் முக்கியமான காலகட்டமாகும்," என்று திரு புட்டின் எச்சரித்தார்.
எட்டு மாதங்களுக்கு முன்பு உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். உலகப் பொருளியலும் இதனால் ஆட்டம் கண்டுள்ளது.
ரஷ்யாவின் இறையாண்மையைப் பாதுகாக்க அந்நாடு அணுவாயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று திரு புட்டினும் ரஷ்ய அதிகாரிகளும் அண்மை வாரங்களாக பலமுறை கூறி வந்துள்ளனர்.
உக்ரேனின் பல பகுதிகளைக் கைப்பற்றவே ரஷ்யா இந்த மிரட்டல்களை விடுக்கிறது என்று மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் சில நாடுகள் கண்டித்து உள்ளன.

