லண்டன்: பிரிட்டனின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க பிரதமர் ரிஷி சுனக் பொருளியல் திட்டம் ஒன்றை வரைந்து வருகிறார்.
இதில் £50 பில்லியன் (S$81.5 பி.) வரையிலான வரி உயர்வும் செலவினக் குறைப்பும் இடம்பெறக்கூடும்.
இந்தத் திட்டம் சந்தைகளில் நம்பகத்தன்மையைப் பெற வேண்டும் என்பதற்காக பிரிட்டனின் £35 பில்லியன் நிதிப் பற்றாக்குறைவிட அதிகமான அளவு பொருளியல் தொகுப்புத் திட்டத்தை வகுக்க பிரதமர் சுனக்கும் நிதி அமைச்சர் ஜெரமி ஹண்ட்டும் விரும்புகின்றனர்.
இந்த விவகாரம் பற்றி அறிந்த அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னைய பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் 7 வார ஆட்சியில், நிதிச் சந்தைகளில் ஏற்படுத்தப்பட்ட கொந்தளிப்பைத் தணிக்க திரு சுனக் முற்பட்டு வருகிறார்.
திருவாட்டி டிரஸ் அறிமுகப்படுத்திய பெரிய அளவிலான வரிக்குறைப்பு நடவடிக்கை, நிதிச் சந்தைகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதோடு, அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்தது.
பிரிட்டிஷ் பொருளியலை நிர்வகிக்க சரியான முடிவுகளை எடுப்பதற்காக, திரு சுனக்கும் திரு ஹண்ட்டும் பொருளியல் திட்ட அறிக்கையை அக்டோபர் 31லிருந்து நவம்பர் 17க்கு ஒத்திவைத்துள்ளனர்.
செலவினத்தைக் குறைக்க 104 தெரிவுகள் கொண்ட பட்டியலை நிதி அமைச்சு வரைந்து உள்ளதாக இந்த விவகாரம் அறிந்த சிலர் இந்த வாரத்தின் முன்பகுதியில் புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தனர்.

