இளவரசர் ஹேரியின் வாழ்க்கை நினைவுக் குறிப்பு ஜனவரியில் வெளியீடு
நியூயார்க்: பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி (படம்) தமது வாழ்க்கை நினைவுக் குறிப்பு நூலை ஜனவரியில் வெளியிடுவார் என்று அதன் பதிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது. தம் மனைவி மேகன் மார்க்கல் மற்றும் இரு பிள்ளைகளுடன் தற்போது கலிஃபோர்னியாவில் வசித்துவரும் இளவரசர் ஹேரியின் நூல் உணர்வுபூர்வமான நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து ஹேரி-மேகன் தம்பதி வெளியேறியதைத் தொடர்ந்து, 'ஸ்பேர்' எனும் தலைப்பைக் கொண்டுள்ள இளவரசர் ஹேரியின் இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரச குடும்பத்தில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை இந்த நூலில் அவர் பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 10ஆம் தேதி இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.
இத்தாலி பேரங்காடியில் கத்திக்குத்து; ஒருவர் மரணம்; நால்வர் காயம்
மிலான்: இத்தாலியின் மிலான் நகரின் அருகேயுள்ள கடைத்தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆர்சனல் காற்பந்துக் குழுவிற்கு விளையாடி வரும் வீரர் ஒருவர் உட்பட நால்வர் இதில் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 46 வயது இத்தாலியர் ஒருவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
தாக்குதலில் ஈடுபட்ட அந்த ஆடவரின் வெறிச் செயலுக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையே தொடர்பு எதுவுமில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடைத்தொகுதியில் உள்ள கார்ஃபோர் பேரங்காடியில் கத்தியை எடுத்த அந்த ஆடவர், அங்கிருந்தவர்களைத் தாக்கத் தொடங்கியதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

