லண்டன்: பிரிட்டனின் சுகாதார சேவை திரு ஸ்டீவ் பார்க்லே பார்வையின்கீழ் மீண்டும் வந்துவிட்டது.
திருவாட்டி லிஸ் டிரஸ் பிரிட்டிஷ் பிரதமரானபோது சுகாதார அமைச்சர் பொறுப்பு திரு பார்க்லேயிடமிருந்து பறிக்கப்பட்டது. ஆனால், திரு ரிஷி சுனக்கின் புதிய அரசாங்கத்தின்கீழ், கைவிட்டுப்போன பொறுப்பு திரு பார்க்லே வசம் திரும்பியது.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்நோக்குகிறது. இங்கிலாந்தில் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக 6.8 மில்லியன் பேர் காத்து இருக்கின்றனர்.
நோயாளிகள் சிலர் 12 மணி நேரம் வரை கவனிக்கப்படாத அளவுக்கு அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிகின்றன. இதைத் தவிர, செப்டம்பரில் புற்றுநோய் நிபுணர்களை நோயாளிகள் பார்க்க கடுமையான தாமதம் ஏற்பட்டது.
மேலும், பணவீக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் தங்களுக்குச் சம்பளம் வழங்கப்படுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவதா என்பது பற்றி இங்கிலாந்தில் தாதியர் யோசித்து வருகின்றனர்.
வரும் குளிர்காலத்தில் சளி, கொவிட்-19 பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், தாதியர் அப்போது போராட்டத்தில் இறங்கினால் தேசிய சுகாதார சேவை மிகக் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்படும்.
வேலையிலிருந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக தாதியர் வெளியேறுகின்றனர். இவ்வாண்டு ஜூன் வரையிலான 12 மாதங்களில், இங்கிலாந்து முழுவதும் 40,000க்கும் அதிகமான தாதியர் பணியிலிருந்து விலகியதாக 'நஃபில்ட் டிரஸ்ட்' எனும் நிறுவனம் தொகுத்த தரவில் தெரியவருகிறது.
இந்த எண்ணிக்கை, ஊழியர் அணியில் 11.5 விழுக்காடாகும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப தேசிய சுகாதார சேவை குடிநுழைவைச் சார்ந்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான 12 மாதங்களில், கிட்டத்தட்ட பாதி அளவு புதிய தாதியர் மற்ற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வந்தவர்களாவர்.
ஓராண்டிற்கு முன்பிருந்ததைவிட தேசிய சுகாதார சேவை ஊழியரணி, ஜூலையில் சற்றே அதிகரித்ததாக சுகாதார, சமுதாயப் பராமரிப்புத் துறை இந்த வாரம் முன்னதாகக் கூறியிருந்தது.

