ஆடவரின் உயிரைக் காப்பாற்றிய 'ஆப்பிள் வாட்ச்' கைக்கடிகாரம்

2 mins read
50ef0276-3c06-40cc-80a7-ebf902a6cc61
செப்டம்பர் 7ஆம் தேதி கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனக் கிளையில், புதிய ஐஃபோன் 14 மற்றும் 'ஆப்பிள் வாட்ச் 8' ரக கைக்கடிகாரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவின் இண்டியானா மாநிலம், இண்டியானாபோலிஸ் நகரில் கார் விபத்தில் சிக்கிக்கொண்ட ஆடவர் ஒருவரை அவர் அணிந்திருந்த 'ஆப்பிள் வாட்ச்' கைக்கடிகாரம் காப்பாற்றியது.

தமது உயிரைக் காப்பாற்றியதற்காக ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி டிம் குக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பி அவருக்கு நன்றியும் தெரிவித்தார் நோலன் அபெல் என்பவர்.

அக்டோபர் 15ஆம் தேதி காரை ஓட்டிக்கொண்டிருந்த அபெல், கட்டுப்பாட்டை இழந்ததால் அவர் விபத்தில் சிக்கிக்கொண்டார். மணிக்கு 70 மைல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த அவரது கார், அதிகாலை 3.30 மணிக்கு மின்கம்பத்தில் மோதியது.

"சுயநினைவுடன் இருக்க நான் போராடினேன். அப்போது 'ஹெலோ, நீங்கள் இங்கு இருக்கிறீர்களா?' எனும் குரலைக் கேட்டேன்," என்று ஏபிசி நியூஸ் நிறுவனத்திடம் அபெல் கூறினார். அந்தக் குரல் அவரது 'ஆப்பிள் வாட்ச்' கைக்கடிகாரத்திடமிருந்து வந்தது.

அப்போது 'ஆப்பிள் வாட்ச்' மட்டும் தம்மிடம் இல்லையென்றால், தமக்கு உதவி கிடைக்க எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் எனத் தமக்கு தெரியாது என்றார்.

"என்னை யாராவது காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இந்தக் கைக்கடிகாரம் ஐந்தே நிமிடங்களில் அவசர மருத்துவச் சேவையை என்னிடம் வந்துசேர்த்தது," என்றார் அபெல்.

விபத்து ஏற்படுவதற்கு ஒருவாரத்திற்கு முன்புதான் ஆப்பிள் வாட்ச்சை அபெல் வாங்கினார்.

மின்னஞ்சலுக்கு ஆப்பிள் தலைமை நிர்வாகி பதில்

இந்நிலையில், அபெல் அனுப்பிய மின்னஞ்சலுக்கு திரு டிம் குக் பதிலளித்தார்.

"இந்த மோசமாக விபத்துக்குப் பிறகு நீங்கள் நலமாக இருக்கிறீர் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களது கதையை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி. இதனாலேயே ஆப்பிள் வாட்சில் இந்தப் பாதுகாப்பு அம்சத்தை நாங்கள் சேர்த்தோம்," என்று மின்னஞ்சல் பதிலில் திரு டிம் குக் குறிப்பிட்டார்.