கோலாலம்பூர்: மலேசியாவில் அடுத்த சில வாரங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் பெரும்பாலான தொகுதிகளில் பலமுனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தப் பலமுனைப் போட்டி, வலுவான வாக்கு வங்கி கொண்டுள்ள தேசிய முன்னணி கூட்டணிக்கு ஆதாயமாக அமையும் என்றும் அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, அம்னோ அங்கம் வகிக்கும் தேசிய முன்னணியை வீழ்த்தும் வகையில் அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான், முகைதீன் யாசின் வழிநடத்தும் பெரிக்கத்தான் நேஷனல், மகாதீர் தலைமை வகிக்கும் கிரக்கான் தானா ஆயர் ஆகியவை பெருங்கூட்டணி அமைக்கக்கூடும் என்று மலேசிய ஊடகங்கள் கூறி வந்தன.
ஆனால், இந்த மூன்று கூட்டணிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
அம்னோவை வீழ்த்துவதற்காக வரும் தேர்தலைப் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியுடன் ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள மகாதீர் தயாராக உள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், மகாதீரைச் சந்திக்க முகைதீன் மறுத்துவிட்டார்.
கெடாவில் நடைபெற்ற கிரக்கான் தானா ஆயர் கூட்டணியின் பிரசார கூட்டத்தில் பேசிய மகாதீர், "எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே அம்னோவை வீழ்த்த முடியும்.
"மக்களுக்காகவும் நாட்டிற்காகவும், முகைதீன் எனக்குச் செய்த துரோகத்தை மறந்து, அவருடன் ஒத்துழைக்க முன்வந்தோம். ஆனால், அவர் அதை நிராகரித்துவிட்டார்," என்றார்.
எந்தவொரு கட்சியின் துணையும் இல்லாமலேயே, வரும் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் வென்றுவிடும் என்று முகைதீன் யாசின் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
மகாதீரின் அழைப்பைப் பக்கத்தான் ஹரப்பானும் நிராகரித்துவிட்டது.
கிரக்கான் தானா ஆயர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நவம்பர் 2ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிகேஆர் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தம்புன் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

