ஜகார்த்தா: உலகளாவிய சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துதல், தொற்றுநோய்த் தடுப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு சுகாதாரத் துறையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜி20 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
மார்ச் மாதம் முதல் இந்தோனீசியாவில் நடைபெற்று வந்த ஜி20 நாடுகளின் சுகாதார தலைவர்களின் சந்திப்பு சென்ற வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் சுகாதார அமைச்சர் புடி குனடி சடிகின் 'கொள்ளைநோய் நிதி' அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
"வளர்ந்து வரும் நாடுகளில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
"புதிய தடுப்பூசிகளை உருவாக்குவதற்குத் தேவையான நிதியும் இப்போது உள்ளது. இது எதிர்காலத்தில் கொள்ளைநோய்க்கு எதிராக உலகம் தயாராக உள்ளதை உறுதிசெய்யும்.
"அத்துடன், உலகளவில் மரபணு ஆய்வகங்களையும் மருத்துவ ஆராய்ச்சி, மருந்துப் பொருள்கள் உற்பத்தி மையங்களையும் மேம்படுத்த வேண்டும்," என்றார் அவர்.
தொற்றுநோய்களை அடையாளம் காண்பதற்குத் தேவையான தரவுகளை உலக நாடுகள் தங்களுக்கு இடையே பகிர்ந்துகொள்வதற்கான வழிகளை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி பயன் படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
மேலும் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குத் தடுப்பூசிகள், மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கான நிதி பற்றாக்குறையைச் சமாளிக்கவும் இது பயன்படுத்தப்படும் என்று இந்தோனீசியா சொன்னது.
கொள்ளைநோய்க்குப் பிறகு மாறுபட்டுள்ள அனைத்துலகப் பயணத்தை எளிதாக்கவும் பொருளியல் மீட்சியை மேம்படுத்தவும் நிலையான பயண நெறிமுறைகளைக் கொண்டுவரவும் இந்தக் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டது. அத்துடன், காசநோய்க்கு எதிரான போராட்டத்தையும் முடுக்கிவிட ஜி20 நாடுகள் முடிவெடுத்து உள்ளன.

