போதைப்பொருள் கடத்தியதாக பேங்காக்கில் சிங்கப்பூரர்கள் கைது
பேங்காக்: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தாய்லாந்தில் இரண்டு சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப் பட்டனர். சட்டவிரோத இரவு நேர நடவடிக்கைகளைக் குறிவைத்து பேங்காக்கிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் அந்நாட்டுக் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது அவர்கள் பிடிபட்டனர்.
34 வயது ஓங் ஷா ஸியோங், 53 வயது லோ கின் அங் ஆகிய இருவரும் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து போதை மாத்திரைகள், கொக்கேன் உள்ளிட்ட வெவ்வேறு விதமான போதைப்பொருள்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.
அத்துடன், சட்டவிரோதமாக தாய்லாந்திற்குள் நுழைந்தது, சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப் பட்ட இந்த அதிரடிச் சோதனையின்போது 200க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர். அவர்களில் பெரும்பாலோர் சீன நாட்டவர்கள் என்று உள்ளூர் ஊடகச் செய்தி தெரிவித்தது.
இலங்கையில் ஏழு மில்லியன் தடுப்பூசிகள் காலாவதி
கொழும்பு: இலங்கையில், ஃபைசர் நிறுவனத்தின் ஏழு மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் நாளையுடன் காலாவதி ஆகவுள்ளன என்றும் அவை தக்க முறையில் அழிக்கப்படும் என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அந்நாட்டில் ஃபைசர் தடுப்பூசிகள் எதுவும் கையிருப்பு இராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் விரைந்து கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி: மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு
பாரிஸ்: சில கொவிட்-19 தடுப்பூசிகள் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கிற்கு வழிவகுக்கக்கூடும் என்று ஐரோப்பிய மருந்துகள் முகமை எச்சரித்துள்ளது.
ஃபைசர் நிறுவனத்தின் கொமிர்னட்டி, மொடர்னாவின் ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலரிடையே மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளதாக முகமையின் அறிக்கை சொன்னது.
ஒரு சில பெண்களிடம் இந்தப் பக்கவிளைவுகள் ஆறு மாத காலத்திற்குக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இதன் காரணமாக அவர்கள் கருவுறுதலில் எந்த பாதிப்பும் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

