தென்கொரியத் தலைநகர் சோலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 151 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இன்றிலிருந்து சம்பவம் கட்டுக்குள் கொண்டுவரப்படும்வரை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் அறிவித்தார்.
இச்சம்பவம் மிக மோசமான விபரீதம் என வருணித்த அதிபர் யூன், மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். இறுதிச் சடங்குகளுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் திரு யூன் குறிப்பிட்டார். கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக இருக்கும் என்று அதிபர் யூன் கூறினார். விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திரு யூன் சொன்னார்.
கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் மாண்டனர். அவர்களில் 19 பேர் வெளிநாட்டினர். அவர்கள் சீனா, ஈரான், நார்வே போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். மாண்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 82 பேர் காயமடைந்தனர்.
தென்கொரியா கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து சோல் நகரில் நடைபெற்ற முதல் 'ஹாலோவீன்' நிகழ்ச்சியில் விபரீதம் நேர்ந்தது.


