தென்கொரிய கூட்ட நெரிசல் விபரீதத்திற்கு உலகத் தலைவர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தலைநகர் சோலில்'ஹாலோவீன்' கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெரிய அளவிலான கூட்டம், ஒரே நேரத்தில் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 151 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் தருவதாக சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் வேதனையை நினைத்துபார்க்கவே சங்கடமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.
விபரீதம் தமக்கு ஆழ்ந்த சோகத்தை அளிப்பதாக ஜப்பானிப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்தார். இச்சம்பவத்தில் பல இளையர்களின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது தமக்கு வேதனையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது துணைவியாரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர். இந்தத் துயரமான காலகட்டத்தில் தென் கொரிய மக்களுடன் தாங்கள் ஆதரவாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பிரெஞ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதோடு, தென் கொரிய மக்களுக்கு தங்கள் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.


