சோமாலியத் தலைநகர் மொகாடிஷுவில் இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர். மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், நாட்டில் நடந்திருக்கும் ஆக மோசமான தாக்குதல் இது எனக் கூறப்பட்டது.
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் லாரி ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 500 பேர் மாண்டனர். தாக்குதலுக்கு அல் காய்தாவோடு தொடர்பு உள்ள பயங்கரவாத அமைப்பான 'அல்ஷபாப்' பொறுப்பேற்றுள்ளது. கல்வி அமைச்சு கட்டடத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது. இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் மன்றம் ஆதரவளிக்கும் சோமாலிய அரசாங்கத்தை எதிர்த்து வந்துள்ளது.
மாண்டவர்களில் பல பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் அடங்குவர் என்றும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் சோமாலியா அதிபர் ஹசான் ஷேக் முகமட் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெளிநாட்டு மருத்துவர்களின் உதவியை அந்நாட்டு அதிபர் கோரினார்.


