மாஸ்கோ: உக்ரேனில் இருந்து மிக முக்கியமான உணவுப்பொருள்கள் ஏற்றுமதியாவதை அனுமதிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாட்டில் இருந்து தற்காலிகமாக ரஷ்யா தன்னை மீட்டுக்கொண்டு இருக்கிறது.
ரஷ்யா ஆக்கிரமித்து இருக்கும் கிரைமியா பகுதியில் சென்றுகொண்டிருந்த ரஷ்யக் கப்பல்கள் மீது ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக மாஸ்கோ தெரிவித்தது.
அதற்குப் பதிலடியாக அந்த உடன்பாட்டில் இருந்து தான் தற்காலிகமாக விலகிக்கொள்வதாக ரஷ்யா அறிவித்தது.
கிரைமியத் தீபகற்பத்தை ரஷ்யா ஏற்கெனவே தன்னுடன் இணைத்துக்கொண்டுவிட்டது.
அந்தத் தீபகற்பத்தில் இருக்கும் செவஸ்தோபோல் என்ற நகருக்கு அருகே தன்னுடைய கப்பல்களைச் சனிக்கிழமை அதிகாலையில் 16 ஆளில்லா வானூர்திகள் மூலம் உக்ரேன் தாக்கியதாகவும் அந்தத் தாக்குதலுக்குப் பிரிட்டனின் கடற்படையைச் சேர்ந்த வல்லுநர்கள் உதவி இருக்கிறார்கள் என்றும் ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. ஆனால், இதை லண்டன் திட்டவட்டமாக மறுத்தது.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்ததன் காரணமாக உலகளவில் உணவுப்பொருள் நெருக்கடி ஏற்பட்டது.
அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ஜூலையில் ரஷ்யாவும் உக்ரேனும் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டன. துருக்கி, ஐநா ஆதரவுடன் அந்த உடன்பாடு இடம்பெற்றது. உக்ரேனில் இருந்து உணவுப்பொருள்கள் ஏற்றுமதியாக அந்த உடன்பாடு வகைசெய்கிறது.
உக்ரேன் துறைமுகத்தில் இருந்து வேளாண்மைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு வகைசெய்யும் உடன்பாட்டை அமல்படுத்துவதில் ரஷ்யா தற்காலிகமாக கலந்துகொள்ளாது என்று மாஸ்கோவின் தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
இதன் மூலம் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து உக்ரேன் உணவுப்பொருள்கள் ஏற்றுமதியாவதற்கான வழிகள் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, உக்ரேனிய போர் உருமாறுவதாகக் கூறப்படுகிறது.
இதுவரையில் உக்ரேனில் தாக்குதல்கள் பீரங்கி, எறிபடை, ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகள் மூலம் வான்வழியாக பல மாதங்களாக நடந்து வந்தன. அப் போரில் இதுவரையில் ரஷ்யாவின் கையே ஓங்கி இருந்தது.
ஆனால், அண்மைய மாதங்களில் தெற்கு உக்ரேனில் நிலைமை மாறியுள்ளது. மேற்கத்திய ஆயுதங்கள், சொந்த ஆளில்லா வானூர்திகள் மூலம் உக்ரேன் கை இப்போது ஓங்கிவருவதாக ராணுவப் பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

