பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங், தனது 3வது பதவிக்காலத்தைப் பரபரப்பாக தொடங்கினார். உலக அளவில் சீனாவின் செல்வாக்கை மேம்படுத்துவதே தனது இலக்கு என்று அவர் சூளுரைத்துள்ளார்.
சீனாவுக்கு வரும் நாள்களில் பல நாடுகளின் தலைவர்களும் வர இருக்கிறார்கள். வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நியூயென் பு துரோங், நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டு நேற்று பெய்ஜிங் வர இருந்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தன் போட்டியாளர்களை எல்லாம் வீழ்த்தி அதிபர் ஸி தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். அவர் சீனாவின் அதிபராக தொடர்ந்து 3வது முறையாக பதவி ஏற்றுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அந்த மாநாட்டில் பேசிய அதிபர், சீனாவின் செல்வாக்கை அனைத்துலக அளவில் உயர்த்தப்போவதாக சூளுரைத்தார்.
பதவி ஏற்ற பிறகு முதலாவதாக வியட்னாம் தலைவரைச் சந்திக்கும் அதிபர் ஸி, பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஷரிஃப், ஜெர்மனி அதிபர் ஒலாஃப் ஷோல்ஸ், தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் அகியோருடன் பேச்சு நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஸி, அடுத்த மாதம் இந்தோனீசியா, தாய்லாந்து நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அந்த நாடுகளில் நடக்கும் முக்கிய உச்சநிலை கூட்டங்களில் அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் புட்டின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்தோனீசியாவில் அடுத்த மாதம் ஜி20 உச்சநிலை மாநாடு நடக்கிறது. தாய்லாந்தில் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாடு நவம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடக்கிறது.
அதிபர் ஸி, 69, மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கும் வருகை அளிக்க திட்டமிடுவதாக சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் கொரோனா முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஏறக்குறைய 1,000 நாள்கள் அதிபர் வெளிநாடு எங்கும் செல்லவில்லை.
கடந்த செப்டம்பரில் மத்திய ஆசியாவுக்குச் சென்று ரஷ்ய அதிபர் புட்டினைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பிய அதிபர் ஸி, தனி மைப்படுத்திக்கொண்டார்.

