செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
eb228042-4095-490e-8c22-ebcb7aa89f85
-

சோமாலிய குண்டுவெடிப்பில் குறைந்தது 100 பேர் உயிரிழப்பு

மொகாடிசு: ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவில் உள்ள கல்வி அமைச்சைக் குறிவைத்து அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. அத்தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் மாண்டதாகவும் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தக் கொடூர தாக்குதலை அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைத் படையினர் நடத்தி இருக்கலாம் என்று சோமாலியா அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அமைப்பு அரசைக் கவிழ்க்க முயன்று வருகிறது.

ஆட்குறைப்பில் டுவிட்டர் தீவிரம்

சான் ஃபிரான்சிஸ்கோ: டுவிட்டர் நிறுவனம் இப்போது எலான் மஸ்க்கின் வசமாகியுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இப்போது சுமார் 7,500 ஊழியர்கள் டுவிட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த எண்ணிக்கை 2,000 ஆகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவித்தன. இதனிடையே, டுவிட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கைகளில் இருக்கிறது என்றார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப்.

பாக்தாத்தில் காற்பந்து விளையாடிய 10 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு காற்பந்துத் திடல் அருகே

நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

ஒரு வாகனத்துடன் பொருத்தப்பட்டு இருந்த வெடிப்புச் சாதனம் வெடிக்கச் செய்யப்பட்டதை அடுத்து பக்கத்தில் இருந்த எரிவாயுத் தொட்டியும் வெடித்ததாக தெரிவிக்கப் பட்டது. மாண்டவர்களில் பெரும்பாலானவர்கள் காற்பந்து விளையாடிக்கொண்டு இருந்தவர்கள்.

பிலிப்பீன்ஸ் புயல்: 48 பேர் பலி; 22 பேரைக் காணவில்லை

மணிலா: பிலிப்பீன்சில் நால்கே புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மாண்டவர்கள் எண்ணிக்கை 48 ஆகிவிட்டதாகவும் 22 பேரைக் காணவில்லை என்றும் நேற்று அந்த நாட்டின் பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்தது.

ஏறக்குறைய 40 பேர் காயமுற்றனர் என்றும் 170,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அரசாங்கத் தகவல்கள் கூறின. மணிலா உள்ளிட்ட பல பகுதிகளை அந்தப் புயல் பெரிதும் பாதித்துவிட்டது. தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு அந்நாட்டு அதிபர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.