ஜகார்த்தா: ஜி20 கூட்டமைப்பு சந்திப்பு நெருங்கும் வேளையில் அதை ஏற்று நடத்தும் இந்தோனீசியா, சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையே பாலமாக இருக்கத் தான் தயாராய் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரேன் பூசலுக்கு உலகத் தலைவர்கள் அமைதியான தீர்வைக் காண்பர் என்ற நம்பிக்கையையும் அது கொண்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் உக்ரேனிய அதிபர் வொலொடமிர் ஸெலென்ஸ்கியும் சந்திப்பில் கலந்துகொள்வர் என்று தாம் நம்பிக்கை வைத்திருப்பதாக இந்தோனீசியாவின் கடல்துறை விவகார, முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சரான லுஹுட் பஞ்சாய்த்தான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் நடைபெற்ற நேர்காணலில் கூறினார்.
ஜி20 கூட்டமைப்புச் சந்திப்பு இந்தோனீசியாவின் பாலி தீவில் இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளப்போவதாக திரு புட்டின், திரு ஸெலென்ஸ்கி இருவரும் முன்னதாகக் கூறியிருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருவரின் விமானங்களின் வருகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திரு லுஹுட் சொன்னார்.
ஜி20 சந்திப்பில் கலந்துகொள்ளும்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் தனிப்பட்ட முறையில் சந்திப்பர் என்று எதிர்பபார்க்கப்படுவதாகவும் திரு லுஹுட் தெரிவித்தார்.
"வரும் ஆண்டுகளில் பொருளியல் ரீதியான பேரிடர் ஏற்படுவதைத் தவிர்க்க அனைவரும் அமைதியாக செயல்படவேண்டும்," என்று குறிப்பிட்ட திரு லுஹுட், "இல்லாவிடில் உலகளவில் பல மில்லியன்கணக்கானோர் பெரிய அளவில் பாதிக்கப்படக்கூடும்," என்றும் எச்சரித்தார்.

