விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
83d8bbd2-b0da-4664-b944-fa0436f7afcf
-

டி20 உலகக் கிண்ணம்: அயர்லாந்தை வென்றது ஆஸ்திரேலியா

பிரிஸ்பன்: ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'சூப்பர்-12' சுற்றின் முதல் பிரிவு ஆட்டத்தில் 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றுள்ளது ஆஸ்திரேலியா (படம்). இதன் மூலம் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கை மீண்டும் பிறந்துள்ளது. முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களை எடுத்தது. 18.1 ஓவர்களில் அயர்லாந்து எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது.

யுனைடெட்டைக் காத்த ட கியா

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டிற்கு எதிரான ஆட்டத்தில் தனது கோல் காப்பாளர் டாவிட் ட கியாவின் பேருதவியுடன் வென்றுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். நேற்று முன்தினம் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.

முற்பாதியில் சிறப்பாக விளையாடிய மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களில் சிரமப்பட்டது. அலை மோதிய வெஸ்ட் ஹேமின் தாக்குதல் ஆட்டத்தை நன்கு எதிர்கொண்டனர் மான்செஸ்டர் யுனைடெட்டின் தற்காப்பு வீரர்கள்.

ஃபாரஸ்ட்டை நசுக்கிய ஆர்சனல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் சென்ற வாரம் சற்று தடுமாறிய ஆர்சனல் தான் சளைத்துப் போகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டிஹம் ஃபாரஸ்ட் குழுவை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. லீக் பட்டியலில் ஃபாரஸ்ட் கடைசி இடத்தில் இருந்தாலும் சென்ற வாரம் அது லிவர்பூலை வென்று திக்குமுக்காடச் செய்தது.

பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வரும் ஆர்சனல் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை முறியடித்து வந்துள்ளது.