கியவ்: உக்ரேனிய தலைநகர் கியவ்வில் தொடர் வெடிப்புகள் நிகழ்ந்த சத்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் நிலவரம் அறிந்த சிலர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். மேலும், உக்ரேனின் வடக்கு, கிழக்கு, மத்திய பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட பகுதிகளின் அதிகாரிகள் கூறினர்.
10க்கும் மேலான வெடிப்புகள் நேர்ந்த பிறகு கியவில் புகை எழுந்ததைக் காணமுடிந்ததென சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர். அதோடு, நகரின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது, தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக ரஷ்யா, உக்ரேன் மீது கூடுதலான ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளது. கிரைமியா பாலத்தைச் சேதப்படுத்திய வெடிப்புக்கு உக்ரேன்தான் காரணம் என்று ரஷ்யா கூறி வருவது அதற்குக் காரணம்.
இதற்கிடையே, உக்ரேனிய தானியங்களை கருங்கடல் வழியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வகைசெய்யும் ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா பின்வாங்கிக்கொண்டதால் உலகில் உணவு நெருக்கடி மேலும் மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. உணவு விலை அதிகாரிக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளுக்கு நூறாயிரம் டன்கள் அளவிலான தானியங்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முயற்சியில் உருவான ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகிக்கொண்டதைத் தொடர்ந்து ஏற்றுமதியில் இடையூறுகள் வரலாம் என்று அஞ்சப்படுகிறது.

