மணிலா: பிலிப்பீன்சில் நல்கே புயலால் குறைந்தது ஆகக் கடைசி நிலவரப்படி 101 பேர் மாண்டுவிட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடிய உடல்களை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாண்டோரில் பாதி பேர் தென் பிலிப்பீன்சில் உள்ள பங்சாமோரோ வட்டாரத்தில் இருந்தவர்கள். அந்த வட்டாரத்தில் 10 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
புயலால் ஏறக்குறைய 69 பேர் காயமுற்றதாகவும் பிலிப்பீன்ஸ் பேரிடர் அமைப்பு கூறியது. கடும் மழையாலும் பலத்த காற்றாலும் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தின் மதிப்பு 384 மில்லியன் பெசோ (9.35 மில்லியன் வெள்ளி) என்று கணிக்கப்பட்டுள்ளது.
மரண எண்ணிக்கை குறித்து பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினேண்ட் மார்க்கோஸ் ஜூனியர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். குறிப்பாக பங்சாமுரோவில் இருக்கும் மாகுவிண்டானாவ் மாநிலத்தில் பதிவான மரண எண்ணிக்கை அவரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
திரு மார்க்கோஸ் ஜூனியர், புயலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் சேதத்தின் அளவை நேற்று உயரத்திலிருந்து கணிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

