சோல்: தென்கொரியாவில் 'ஹாலோவீன்' எனும் 'பேய்விழா'வில் நிகழ்ந்த விபரீதத்தில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த அந்நாட்டு அதிபர் யூன் சுக்-இயோல் நினைவாலயம் ஒன்றை அமைத்துள்ளார். நினைவுப்பீடம் சோலின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தென்கொரியத் தலைநகர் சோலின் இட்டேவான் பகுதியில் நடைபெற்ற 'பேய்விழா' கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் முட்டி மோதி மிதிபட்டு குறைந்தது 154 பேர் மாண்டனர்.
கூட்டத்தைச் சமாளிக்க அதிகாரிகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த விபரீதம் நிகழ்ந்ததென பல தரப்பினர் குறைகூறி வருகின்றனர். எனினும், 'பேய்விழா' நிகழ்ச்சிக்கு 137 அதிகாரிகளைப் பணியில் ஈடுபடுத்தியதாகக் காவல்துறை தெரிவித்தது. முந்தைய ஆண்டுகளில் இந்நிகழ்ச்சிக்குப் பணியில் நிறுத்தப்பட்ட அதிகாரிகளைவிட இம்முறை கூடுதலானோர் ஈடுபடுத்தப்பட்டதாக நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கமும் நேற்று முன்தினம் தற்காத்துப் பேசியது.
"முன்கூட்டியே காவல்துறையினரையும் தீயணைப்பு அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்துவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இருந்திருக்காது," என்று தென்கொரிய உள்துறை அமைச்சர் லீ சாங்-மின் சொன்னார்.
சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்போவதாக தென்கொரியப் பிரதமர் ஹான் டக்-சூ தெரிவித்தார்.
இந்த துயரச் சம்பவத்தையடுத்து தென்கொரியாவில் பல கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அந்நாட்டின் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

