அடுத்த ஆறு மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு அதலபாதாளத்திற்குச் செல்லக்கூடும். ஒரு டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 5.00ஐ எட்டக்கூடும்.
அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதங்களை உயர்த்திவரும் வேளையில், அமெரிக்க நாணயத்தின் மதிப்பு கணிசமாகக் கூடியுள்ளதே இதற்குக் காரணம். பணவீக்கமும் தொடர்ந்து அதிகமாக இருந்து வருவதும் மற்றொரு காரணம்.
வட்டி விகிதங்கள் குறித்து அமெரிக்க மத்திய வங்கி புதன்கிழமை (நவம்பர் 2) முடிவெடுக்கவுள்ள நிலையில், டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் மதிப்பு செவ்வாய்க்கிழமை 4.73 ஆக உள்ளது.
இந்த வாரம், அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதங்களை 0.75 விழுக்காட்டுப் புள்ளி உயர்த்தும் என பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டால் அமெரிக்க நாணயம் மேலும் வலுவடையும். 2000க்குப் பிறகு, பிரதான நாணயங்கள் பலவற்றுக்கு எதிராக அமெரிக்க டாலர் தற்போது ஆக வலுவான நிலையில் உள்ளது.
இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை ரிங்கிட்டிற்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு ஏறத்தாழ 13.7 விழுக்காடு கூடியுள்ளது.


