தைவானில் 'போர்ஷ' ரக சொகுசு கார் மோதிய விபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சிங்கப்பூரர் ஒருவர் உயிரிழந்தார்.
அந்த ஆடவர் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானச் சிப்பந்தியாக பணியாற்றி வந்தார்.
பணியிலிருந்து விடுப்பு எடுத்து செவ்வாய்க்கிழமைதான் அவர் தைவான் சென்று இறங்கியதாக தைவான் நியூஸ் இணையத்தளம் தெரிவித்தது. அவர் 30களில் அல்லது 40களில் இருந்திருப்பார் என நம்பப்படுகிறது. அவர் வேறு யாருடன் சேர்ந்து பயணம் செய்தார் என்பது தெரியவில்லை.
பாதசாரிகள் நடப்பதற்கு அல்லாத சாலையை அவர் கடந்தபோது, தைப்பேயின் ட அன் மாவட்டத்தில் டன்ஹுவா சௌத் சாலை வழியாக வந்துகொண்டிருந்த கார் இரவு 9 மணியளவில் அவரை மோதியது.
காரின் முன்பகுதி மோசமாக சேதமடையும் அளவிற்கு அந்த ஆடவரை அது மோதியதாக தைவான் நியூஸ் குறிப்பிட்டது.
அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்துவிட்டதாக இரவு 10 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
சியாங் எனும் 52 வயது கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தைவான் நியூஸ் கூறியது. அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது விசாரணையில் தெரியவந்தது.