பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தேர்தல் கொள்கையறிக்கை வெளியீடு
கிள்ளான்: மலேசியாவின் எதிர்த்தரப்பு பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கலாசாரப் பன்முகத்தை வலியுறுத்தும் வேளையில் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க மலேசியர் அனைவருக்கும் உதவி வழங்கப்படும் என்று அதில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சிச் சீன உயர்நிலைப் பள்ளிகள் வழங்கும் உயர்கல்விச் சான்றிதழுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாங்கள் வெற்றிபெற்றால் இரண்டு துணைப் பிரதமர்கள் பொறுப்பேற்பர் என்றும் அவர்களில் ஒருவர் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்தவராகவும் மற்றவர் நாட்டின் கிழக்குப் பகுதியான சாபா அல்லது சரவாக்கைச் சேர்ந்தவராகவும் இருப்பார் என்றும் உறுதிகூறினார்.
கடந்த 30 மாதங்களாக ஆளும் தரப்பினால் பேரழிவுக்குள்ளான மலேசியாவைப் புனரமைப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர். தங்களை எதிர்த்துத் தேர்தல் களத்தில் இறங்கியிருப்போர் இனவாதத்தை ஆதரிக்கும் வேளையில் பக்கத்தான் ஹரப்பான் கலாசாரப் பன்முகத்தன்மையுடன் விளங்குவதாகத் திரு அன்வார் கூறினார்.
நிலையான நாடாளுமன்ற ஆட்சிக்காலச் சட்டத்தை அமல்படுத்தஅவர் உறுதியளித்தார். ஆளும் தரப்பின் உட்கட்சிப் பூசலால் நாடாளுமன்றமோ சட்டமன்றமோ அதன் தவணைக்காலம் முடியும் முன்னரே கலைக்கப்படுவதை இது தடைசெய்யும்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள், அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரின் சொத்து விவரங்களை வெளியிடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று திரு அன்வார் உறுதியளித்தார்.
மேற்கூறிய அனைவரின் வாழ்க்கைத் துணை உள்ளிட்ட 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறப்பட்டது.

