ஒட்டாவா: கனடிய அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 1.45 மில்லியன் பேருக்குக் குடிநுழைவு அனுமதி வழங்கத் திட்டமிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை இதற்குக் காரணம். கனடாவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வேலைகள் காலியாக இருப்பதாக அந்நாட்டுக் குடிநுழைவுத் துறை அமைச்சர் ஷான் ஃபிரேசர் குறிப்பிட்டார்.
சென்ற வாரம் கனடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறை அங்கிருக்கும் ஏறத்தாழ ஐந்தில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர் என்று தகவல் வெளியிட்டிருந்தது. இவ்வேளையில் கனடிய அரசாங்கத்தின் புதிய குடிநுழைவுக் கொள்கை கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவீடன், இத்தாலி போன்ற மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவின் இந்தக் கொள்கை மிகவும் மாறுபட்டுள்ளதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.
மூப்படையும் மக்கள்தொகை, பலரும் ஓய்வுபெறுதல் ஆகியவற்றால் கனடாவில் ஊழியர் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது. பிறப்பு விகிதமும் குறைவாக இருக்கும் நிலையில் அரசாங்கத்தின் குடிநுழைவுக் கொள்கைக்கு நாட்டு மக்களிடையே வலுவான ஆதரவு கிடைத்துவருகிறது.
அண்மைய ஆய்வில் 58 விழுக்காட்டினர், கூடுதலான வெளிநாட்டினரை அனுமதிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சுகாதாரப் பராமரிப்பு, உற்பத்தி, பொறியியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை அதிகம் பதிவாகியிருப்பதால் இத் துறைகளைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

