ஷாங்காய்: 1926ல் பிறந்த ஸு குவிச்சென்னும் காவ் ஸென்வெய்யும் 16 வயதிலிருந்தே நண்பர்கள். பிரிந்துபோன இவர்கள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒன்றிணைந்து, 94வது வயதில் திருமணம் செய்துகொண்டனர்.
நெருங்கிய நண்பர்களாக இருந்த இவ்விருவரின் தந்தைகளும் சீனாவின் ஷாண்டோங் மாநிலம், வெய்ஹாய் பகுதியில் புகைப்படக்கூடத்தை நடத்தி வந்தனர்.
தம்முடைய மகளை திரு காவுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார் ஸுவின் தந்தை. ஆனால், திரு காவுக்கு ஏற்கெனவே வேறொருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் வெவ்வேறு வழியில் சென்று தனித்தனியே குடும்பத்தை அமைத்துக்கொண்டனர்.
2019ல், ஸுவின் தம்பியை சந்தித்த திரு காவ், ஸுவை பற்றி கேட்டார். ஸுவின் தம்பியின் ஊக்குவிப்புடன் ஸுவை தொடர்புகொண்டார் திரு காவ்.
ஸுவை அவர் சந்தித்து, பழைய நினைவுகளைப் பற்றிப் பேசி, புதிய நினைவுகளை உருவாக்கினர். இதிலிருந்து இவர்களின் தொலைந்துபோன காதல் தொலைபேசி மூலம் மலர ஆரம்பித்தது.
70 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பார்க்காவிட்டாலும், தங்கள் இருவருக்குமிடையே இருந்த தொடர்பு தொலையாமல் இருந்ததுபோல் தாம் உணர்ந்ததாக திரு காவ் கூறினார். தனிமையுடன் இருக்கும் தங்களுக்கு வாழ்க்கைத் துணை தேவை என்பதும் இந்த விதி எதிர்பாராத ஒன்று என்றும் திரு காவ் கூறினார்.
2020 செப்டம்பரில் தங்களின் பிள்ளைகளின் ஆதரவுடன் திருமணம் செய்துகொண்ட இவர்கள், ஸுவின் முதியோர் இல்லத்தில் வாழ ஆரம்பித்தனர்.
தங்களின் பிள்ளைகளை தொந்தரவு செய்யாமல், ஒருவருக்கொருவர் பாத்துக்கொள்ளலாம் என்று திரு காவ்விடம் ஸு கூறினார்.
"நமது காதல் இளையர்கள் காதல்போல அல்ல, உன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல தேவை இல்லை. ஒருவருக்கொருவர் அன்பு காட்டி, பாத்துக்கொள்வதே நமது காதல்," என்று திரு காவ்விடம் ஸு கூறினார்.