குழந்தைப் பாலியல் துன்புறுத்தலில் தொடர்புடைய ஆஸ்திரேலியர் ஒருவருக்கு பிலிப்பீன்சில் 129 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பீட்டர் ஜெரார்ட் ஸ்கல்லி என்ற ஆடவர் 18 மாதக் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை எனக் கூறப்பட்டது.
"பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவோருக்கும் ஆட்கடத்தல்காரர்களுக்கும் இந்தத் தீர்ப்பு பெரும் எச்சரிக்கையாக விளங்கும் என நம்புகிறேன்," என்று ககயன் டி ஓரோ நகர நீதிமன்றத்தின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் மெர்லின் பரோலா உய் தெரிவித்தார்.
தண்டிக்கப்பட்ட பீட்டர் ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை, சிறுமியர் கடத்தல் தொடர்பான வழக்கில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு, வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
பீட்டர், அவரின் காதலி, மேலும் இரு கூட்டாளிகள்மீது ஆட்கடத்தல், குழந்தை ஆபாசப்படம், குழந்தைத் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 60 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இவ்வழக்கில் இம்மாதம் 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. பீட்டரின் காதலி லவ்லி மர்கலோவிற்கு 126 ஆண்டுகளும் மற்ற இருவருக்கும் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.