மாலத்தீவு தலைநகரில் தீ; வெளிநாட்டு ஊழியர்கள் 10 பேர் உயிரிழப்பு

மாலத்தீவு தலைநகரில் தீ; வெளிநாட்டு ஊழியர்கள் 10 பேர் உயிரிழப்பு

1 mins read
e83074ef-de0f-4b11-a610-e483360a7191
தீயால் சேதமுற்ற கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், வேறோர் இடத்திற்கு அழைத்துச்செல்லப்படுவதற்காக காத்திருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி -

மாலத்தீவு தலைநகர் மாலேயில் வியாழக்கிழமை (நவம்பர் 10) ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமுற்றனர். நெரிசலான தங்குமிடச் சூழலில் தீ பரவியதாக தீயணைப்புத் துறை கூறியது.

தீயால் சேதமடைந்த கட்டடத்தின் மேல்மாடியில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தரைத்தளத்தில் உள்ள வாகனப் பழுதுபார்ப்பு இடத்தில் தீ பரவத் தொடங்கியது.

தீயை அணைக்க ஏறக்குறைய நான்கு மணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இறந்தவர்களில் ஒன்பது இந்தியர்களும் பங்ளாதேஷ் நாட்டவர் ஒருவரும் அடங்குவர் என்று பாதுகாவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வசிப்பிடச் சூழல் பற்றி மாலத்தீவு அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளனர்.

மாலேயில் வசிக்கும் 250,000 பேரில் வெளிநாட்டு ஊழியர்கள் பாதியளவு பங்கு வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் பங்ளாதேஷ், இந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

கொவிட்-19 பெருந்தொற்றின்போது வெளிநாட்டு ஊழியர்களின் நெரிசலான வசிப்பிடச் சூழல் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது.