டுவிட்டர் ஊழியர்களுக்கு அதன் உரிமையாளர் அனுப்பிய முதல் மின்னஞ்சல்: சிரமமான காலகட்டத்திற்குத் தயாராகுக

டுவிட்டர் ஊழியர்களுக்கு அதன் உரிமையாளர் அனுப்பிய முதல் மின்னஞ்சல்: சிரமமான காலகட்டத்திற்குத் தயாராகுக

1 mins read
707dc03b-9d84-4996-b449-011e35ac0462
டுவிட்டர் உரிமையாளர் எலன் மஸ்க். படம்: ஏஎஃப்பி -

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் எலன் மஸ்க், தம்முடைய ஊழியர்களுக்கு புதன்கிழமை அனுப்பிய முதல் மின்னஞ்சலில், "சிரமமான காலகட்டத்திற்குத் தயாராகுக" என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருளியல் கண்ணோட்டம் குறித்தும் டுவிட்டரைப் போல விளம்பர வருவாயைச் சார்ந்துள்ள நிறுவனத்தை அது எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றியும் நல்ல விதமாக எடுத்துரைப்பதற்கு வேறு வழியே இல்லை என்று திரு மஸ்க் மின்னஞ்சலில் கூறினார்.

மேலும், வீட்டிலிருந்தோ வேறு எங்கிருந்தோ வேலை செய்யும் நடைமுறை இனி அனுமதிக்கப்படாது என்று சொன்ன அவர், ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தது 40 மணி நேரம் அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார்.

டுவிட்டர் நிறுவனம், கிட்டத்தட்ட இரண்டு வார காலமாக திரு மஸ்க்கின் தலைமைத்துவத்தின்கீழ் இயங்கி வருகிறது. டுவிட்டர் உரிமையாளரானவுடன், அதன் ஊழியரணியில் ஏறக்குறைய பாதிப் பேரை அவர் பணியிலிருந்து நீக்கினார்.