பெட்டாலிங் ஜெயா: சுங்கை புலோ நாடாளுமன்றத் தொகுதியில் தாம் போட்டியிட விரும்புவதாக மலேசியாவின் இடைக்கால சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்ததாக அம்னோ கட்சியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
நேற்று தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதுகுறித்து அவர் பேசினார்.
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் நெகிரி செம்பிலானில் உள்ள ரெம்பாவ் தொகுதியில்தான் திரு கைரி போட்டியிட்டு வென்றார்.
ஆனால் இம்முறை அந்தத் தொகுதியில் அம்னோவின் துணைத் தலைவர் முகம்மது ஹசான் போட்டியிடுகிறார்.
சுங்கை புலோவின் மலேசிய இந்தியர் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவது வழக்கம்.
ஆனால் இம்முறை சுங்கை புலோவை அம்னோ எடுத்துக்கொண்டது. மஇகாவுக்கு அதற்குப் பதிலாக கோலா லாங்காட் தரப்பட்டுள்ளது.
அதில் மஇகாவின் மகளிர் அணித் தலைவர் மோகனா முனியாண்டி போட்டியிடுகிறார்.
இதற்கிடையே, சுங்கை புலோவில் பிரசாரம் செய்வதில் கைரி தீவிரம் காட்டி வருகிறார்.
எதிர்காலத்தில் மலேசியப்
பிரதமராவதற்குத் தமக்கு விருப்பம் இருப்பதாகவும் அதற்கு முன்பு சுங்கை புலோவில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என அண்மையில் தெரிவித்தார்.

