பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் நிலைமை சற்று மோசமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதில் போக்குவரத்து வெகு
வாகப் பாதிக்கப்பட்டது. கனமழை தொடரும் என்று வானிலை மையம் முன்னுரைத்திருப்பதால் நிலைமை மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கிள்ளான் பள்ளத்தாக்கில் வெள்ளத் தயார்நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மலேசியப் பொதுத் தேர்தல் நெருங்குவதால் நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்கள் சூடுபிடித்துள்ளன.
ஆனால் சிலாங்கூரில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரக் கூட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர். சுங்கை புலோவில் போட்டியிடும் இடைக்கால சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்றார். அங்கு முழங்கால் அளவிலான வெள்ள நீரில் நடந்து சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதேபோல பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் ரமணன் ராம
கிருஷ்ணனும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார்.
கொம்பாக் தொகுதியில் போட்டி யிடும் சிலாங்கூர் முதல்வர் அமிருதீன் ஷாரியும் தமது தொகுதி உலாவையும் பிரசாரக் கூட்டத்தையும் ரத்து செய்து பெட்டாலிங்,
கிள்ளான் ஆகிய மாவட்டங்களில் உள்ள துயர்துடைப்பு மையங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார்.
தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையில், வெள்ளம் மோசமடைவதால் வாக்காளர்
களால் வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கவலைப்
படுகின்றன. தற்போது சிலாங்கூரைப் புரட்டிப்போடும் வெள்ளம் அடுத்த சில நாள்களில் மற்ற
மாநிலங்களையும் உலுக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. வாக்காளர் எண்ணிக்கை குறைந்தால் தேசிய முன்னணிக்கு அது சாதகமாக அமையக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
உறுதி அளித்த சரவணன்
இந்நிலையில், தேர்தல் நாளன்று பேராக் மாநிலத்தின் தாப்பா தொகுதியில் வெள்ளம் ஏற்பட்டால் வாக்காளர்களை வாக்களிப்பு மையங்களுக்குக் கொண்டு செல்ல கிட்டத்தட்ட 1,000 வாகனங்களைத் தயார்நிலையில் வைத்திருப்பதாக தேசிய முன்னணி சார்பாக அங்கு போட்டியிடும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் எம். சரவணன் உறுதி அளித்துள்ளார்.
அன்வார் குற்றச்சாட்டு
இது ஒருபுறம் இருக்க, நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே மலேசிய ராணுவ அதிகாரிகள் வாக்களிக்கத் தொடங்கிவிட்டதாக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த முறைகேடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என திரங்கானுவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திரு அன்வார் கேட்டுக்கொண்டார்.
தேசிய முன்னணிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறைவாக இருப்பதை உணர்ந்த இடைக்காலப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இத்தகைய முறையற்ற உத்திகளைக் கையாள்வதாக திரு அன்வார் சாடினார்.
"இஸ்மாயில் சப்ரி போட்டியிடும் பெரா தொகுதியில் ராணுவ அதிகாரிகள் முன்கூட்டியே வாக்களித் துவிட்டனர். அவர்களுக்குத் தலா 300 ரிங்கிட் கொடுக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் திரு அன்வார்.
சொத்து விவரங்கள்
முடா கட்சி நிறுவனரும் ஜோகூரின் மூவார் தொகுதி வேட்பாளருமான 29 வயது சயீது சாதிக் சயீது ரஹ்மான் தமது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். தமது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 1.91 மில்லியன் ரிங்கிட் ($570,000) என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சேர்த்து தமது பழைய மிதிவண்டியையும் இரண்டு பூனை
களையும் அவர் சொத்துப் பட்டியலில் சேர்த்துக்கொண்டார்.
கருத்துக்கணிப்பு
இதற்கிடையே, பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்றில் ஒரு மலேசியர் விரும்புவதாக மெர்டேக்கா சென்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அடுத்த பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவி வகிக்க வேண்டும் என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பலர் விரும்பு வதாகக் கூறப்படுகிறது.
மலாய்க்காரர்களில் 35 விழுக்காட்டினர் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புவதாக கருத்துக்
கணிப்பு தெரிவித்தது.

