செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ceba9ccf-90ab-465e-b581-b8a66eaacb82
-

சொகுசுக் கப்பலில் கிருமிப் பரவல்; ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் நடப்பில் உள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

சிட்னியில் நிறுத்தப்பட்டுள்ள கார்னிவல் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் மெஜஸ்டிக் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில் பயணம் செய்த 800 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மாநில சுகாதார அதிகாரிகள், பெருமளவில் கிருமிப் பரவுவதற்கான வாய்ப்புள்ளதைக் குறிக்கும் மூன்றாவது கட்ட அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2020ல் ரூபி பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில் பயணம் செய்த 914 பேர் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். அவர்களில் 28 பேர் மாண்டுவிட்டதாக அப்போது கூறப்பட்டது.

மியன்மாரில் மீண்டும் ஜனநாயகம்: ஐநா வலியுறுத்தல்

நோம் பென்: மியன்மாரில் உடனடியாக மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வருமாறு ஐநா தலைவர் அன்டோனியோ குட்ரெஸ் அந்நாட்டின் ராணுவ ஆட்சிக் குழுவை வலியுறுத்தியுள்ளார். மியன்மாரை காப்பாற்றக்கூடிய ஒரே வழி அதுதான் என்றும் அவர் சொன்னார்.

ஆசியான் தலைவர்களைச் சந்தித்த பிறகு பேசிய குட்ரெஸ், மியன்மார் ராணுவ ஆட்சிக் குழுவுடனான அமைதித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். "மியன்மாரில் நிலவும் தொடர் மோதல்கள், வட்டாரத்தில் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது," என்றார் அவர்.

2021ல் பிப்ரவரி மாதம் மியன்மாரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு தொடர்ந்து வன்முறைகளும் மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை, சீரமைக்கப்படுகின்றன: சீனா

ஷாங்காய்: சீனாவின் கிருமித்தொற்றைத் துடைத்தொழிக்கும் திட்டத்திற்கான விதிமுறைகள் மறுசீரமைக்கப்படுகின்றனவே தவிர கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை என்று அந்நாட்டின் உயர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளில் சீனா கொண்டு வந்துள்ள மாற்றங்கள், அந்நாடு கிருமித்தொற்றுடன் வாழ்வதற்கான முதல் படி என்ற யூகங்களையும் அவர்கள் நிராகரித்தனர். பயணிகள், தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான ஐந்து நாள் தனிமைப்படுத்தல் காலத்தில் பெரும்பாலான கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டதைத் தரவுகள் காட்டுவதாகவும் அதிகாரிகள் கூறினார்.