கோலாலம்பூர்: மலேசியாவில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட பலர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் இன்னும் ஏழு நாள்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய மழையும் வெள்ளமும் அரசாங்கம் மீதான மக்களின் கோபத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் உள்ள நிலையில், பருவ மழை காலத்தில் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து மலேசிய மக்கள் கோபமடைந்துள்ளனர்.
பல பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தங்கள் பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 720 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
பாரிசான் நேஷனல் கட்சியின் ஹுலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான ஜோஹன் அப் அஜிஸ், வெள்ளத்தில் சிக்கிஉள்ளவர்களை மீட்பதற்காக தாம் 15 படகுகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாக சொன்னார்.
கெடாவில் உள்ள ஆறு நிவாரண மையங்களில் கிட்டத்தட்ட 240 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். பினாங்கில் கிட்டத்தட்ட 120 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
வெள்ள நிவாரணத் திட்டங்களுக்காக மாநில அரசு கடந்த பத்தாண்டுகளில் 300 மில்லியன் ரிங்கிட் (S$89 மில்லியன்) செலவிட்டுள்ளதாக அதன் முதல்வர் சௌ கோன் இயோவ் சொன்னார்.
இந்நிலையில், வரும் 17ஆம் தேதி வரை பல பகுதிகளில் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சிலாங்கூர், பாஹாங், கெடா, பினாங்கு, நெகிரி செம்பிலான், ஜோகூர், திரங்கானு, கிளந்தான் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அது சொன்னது.
மலேசியாவில் சென்ற ஆண்டு இதுவரை காணாத வகையில் மோசமான வெள்ளப் பெருக்கிற்கு
54 பேர் மாண்டுவிட்டனர். கிட்டத்தட்ட 6.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது.

