கோலாலம்பூர்: மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 108 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான பூசல், அரசியல் நிலையற்ற தன்மைக்கு வழிவகுத்தது பற்றி வாக்காளர்களிடையே நிலவும் அதிருப்தியை இது வெளிப்படுத்துவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் கட்சியின் புதிய உறுப்பினர்கள், கட்சித் தாவியவர்களை சில கட்சியின் தலைவர்கள் வேட்பாளர்களாக அறிவித்ததால், அதிருப்தி அடைந்தவர்களும் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
"இது அரசியல் விழிப்புணர்வின் அறிகுறி. நமது ஜனநாயகம் இப்போது மிகவும் வலுவாகவும் ஆற்றல் மிக்கதாகவும் உள்ளது. மேலும் மக்களுக்கு முன்னெப்போதையும் விட அதிகமான தேர்வுகள் உள்ளன," என்றார் அரசியல் ஆய்வு நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரியான அரின் நஜ்வா.
மலேசியாவின் அரசியல் நிலையற்றதன்மை காரணமாக, சென்ற 2020ஆம் ஆண்டில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக் கவிழ்ந்தது.
மலேசியாவின் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் 10 பேர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் ஆக அதிகமான வேட்பாளர்களைக் கொண்ட பகுதியாக இது இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
2020 மாநிலத் தேர்தலின் போது சாபாவில் உள்ள பெங்கோகாவின் தொகுதியில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

