நுசா டுவா: இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் தெய்வங்களின் தீவு என்று வர்ணிக்கப்படும் இந்தோனீசியாவின் பாலி தீவில் ஜி-20 உச்சநிலை மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பாதுகாப்பாக தலைவர்களை அழைத்துச் செல்ல மின்சார வாகனங்கள், குதிரைப் படை, போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் என உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலி தீவின் நுசா டுவா உல்லாச வளாகத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு வரும் உலகத் தலைவர்கள், அவர்கள் தலைமை தாங்கும் குழுக்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க 18,000க்கும் மேலான காவல் துறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு 'ஆபரேஷன் கிராண்ட் காசல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர் வெடிகுண்டுத் தாக்குதல், பயங்கரவாதத் தாக்குதல், இயற்கைப் பேரிடர்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்து வகை அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
"நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம், எங்கள் நாட்டில் நடைபெறவுள்ள மிகப் பெரிய விழாவுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இது எங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய கௌரவம்," என்று தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியான்தோ விளக்கினார்.
உலகின் முக்கிய பணக்கார நாடுகளைக் கொண்ட ஜி-20 மாநாட்டை முதன் முதலாக ஏற்று நடத்தும் இந்தோனீசியா, அதை வெற்றிகரமாக நடத்துவதை உறுதி செய்ய எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
அனைத்துலக மாநாடுகள், நிகழ்ச்சிகளை ஏற்று நடத்துவதில் பாலிக்கு புதிதல்ல என்றாலும், இந்த முறை பாதுகாப்பு வளையம் மிகக் கடுமையாக இருப்பதாக அந்தத் தீவில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் சோல்ஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என குறைந்தது 17 உலகத் தலைவர்கள் தாங்கள் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் ரஷ்யா-உக்ரைன் போர் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
பாலி தீவின் ஆகாயவெளி, நீர்நிலைகளை 12 போர்க்கப்பல்கள், இரண்டு எஃப்-16 ரக போர் விமானங்கள், 13 ஹெலிகாப்டர்கள் பாதுகாக்கும்.
அதேசமயம், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அவசரநிலைகளிலிருந்து பேராளர்களைக் காப்பாற்ற ஆனோவா ரக கவச வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
மாநாடு நடைபெறும் நுசா டுவா வளாகத்துக்கு அருகே போர்க்கப்பல் ஒன்று மாநாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு சிகிச்சை வழங்க மிதக்கும் மருத்துவமனையாக செயல்படும். உலகத் தலைவர்களையும் மற்ற பேராளர்களையும் அழைத்துச் செல்ல 42 மின்சார வாகனங்களும் 126 மோட்டார்சைக்கிள்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முக்கிய மாநாட்டுக் கூட்டம் நடைபெறும் பாலியின் அபூர்வா கெம்பின்ஸ்கி ஹோட்டலைச் சுற்றிய பாதுகாப்பு வளையத்தில் நெதர்லாந்தில் பராமரிக்கப்பட்ட உயர்ரக குதிரைகளில் 18 காவல் துறை அதிகாரிகள் மூன்று பிரிவுகளாக தொடர் சுற்றுக் காவலில் ஈடுபடுவர்.
பாலியின் கடற்கரைப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், அல்லது பெரிய அளவிலான கலகங்களோ ஏற்பட்டால் இந்தக் குதிரைப் படைப் பிரிவு பேருதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம், ஆனோவா கவச வாகனங்களும் பேராளர்களை அவசர நிலையில் அப்புறப்படுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலும் உள்ளூர், வெளிநாட்டு வருகையாளர்களை கண்காணிக்க உதவியாக முக அடையாள வசதியுள்ள புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

