செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d96ea26a-b9c9-4710-a32c-48e660ff99b9
-

மலேசியா: பொதுத் தேர்தலுடன்

டுரியான் விற்பனையும் சூடுபிடிக்கிறது

பாகாங்: மலேசிய பொதுத் தேர்தல் வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. டுரியானுக்கு பெயர்பெற்ற பாகாங் மாநிலத்தின் ராவுப் நகரில் டுரியான் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து இந்நகருக்கு வந்து டுரியான் பழங்களை வாங்கிச் செல்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக அனைவராலும் விரும்பி வாங்கப்படும் 'மூசாங் கிங்' என்னும் முதல்தர டுரியான் பழங்கள் அதிகமாக விற்பனையாவதாக அங்குள்ள கடைக்காரர்கள் கூறுகின்றனர். தேர்தலில் ஈடுபட்டிருப்போர், சுற்றுலாப்பயணிகள் என ஏராளமானோர் டுரியான் பழங்களை விரும்பி வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர். ராவுப் வழியாகச் செல்லும் பயணிகள், அங்கு விற்கும் சுவையான டுரியான் பழங்களை வாங்கிச் செல்ல மறப்பதில்லை. டுரியான் பழங்கள் ஏஏ, ஏ, பி, சி என வகைப்படுத்தப்பட்டு கிலோ 28 ரிங்கிட் முதல் 58 ரிங்கிட் விலை வரையில் விற்கப்படுவதாக ராவுப் கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

பாரிஸ் விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்த ஈரானியர் மரணம்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் விமான நிலையத்தில் 18 ஆண்டுகாலமாக வாழ்ந்துவந்த ஈரான் நாட்டவரான மெக்ரான் கரிமி நஸ்ஸெரி நேற்று மரணமடைந்தார். இதனை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் 1988ஆம் ஆண்டு முதல் பாரிஸின் காலே விமானநிலையத்தில் ஒரு சிறிய பகுதியில் தங்கி வந்தார். திரு கரிமி, தனது தாயைத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அலைந்து திரிந்து பின்னர் சில ஆண்டுகளை பெல்ஜியத்தில் கழித்தார். குடிநுழைவுத் துறை அதிகாரிகளிடம் பிடிப்பட்ட அவரிடம் விசா உள்ளிட்ட குடிநுழைவுச் சான்றிதழ்கள் இல்லாததால் இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் பிரான்சில் அவருக்கு

அகதிகளுக்கான அனுமதி கிடைத்தது. அதனைக்கொண்டு நகருக்குள் நுழைந்த அவர், ஒரே வாரத்திற்குள் பாரிஸ் விமான நிலையத்திற்கே திரும்பி விட்டார். அன்று முதல் அவர் அங்கேயே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டு வாழ்ந்துவந்தார்.

நேப்பாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

காட்மாண்டு: நேப்பாளத்தில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உயிர்ச்சேதம், காயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் அளிக்கப்படவில்லை. 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், வடஇந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நேப்பாளத்தில் சில நாட்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேர்ந்தது. அதில் குறைந்தது ஆறு பேர் மாண்டதாகவும், பல வீடுகள் தரைமட்டமானதாகவும் தெரிவிக்கப்பட்டது.