டென்பசார்: இந்தோனீசியாவில் நடைபெறும் ஜி20 கூட்டத்தில் கலந்துகொள்ள பாலித் தீவிக்கு வருகை மேற்கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதய நோய் காரணமாக 72 வயதான
திரு லாவ்ரோவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
மருத்துவமனையில் அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக பாலித் தீவு ஆளூநர் கூறினார்.
இத்தகவலை பொய்த் தகவல் என ரஷ்ய அரசாங்கம் மறுத்துள்ளது. ஜி20 கூட்டத்திற்காக திரு லாவ்ரோவ் தம்மைத் தயார்ப்படுத்தி வருவதாக ரஷ்யாவின் டெஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இது பொய்த் தகவலின் உச்சம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார். வெளிப்புறத்தில் திரு லாவ்ரோவ் அமர்ந்துகொண்டு ஆவணங்களைப் படிப்பதுபோன்ற புகைப்படம் ஒன்றை அப்பேச்சாளர் வெளியிட்டார்.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு ரஷ்யாவைப் பற்றி பொய்த் தகவல்கள் அளிப்பதே வேலையாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

