இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர்; கிட்டத்தட்ட 81 பேர் காயமுற்றனர். கூட்டம் அதிகமுள்ள இஸ்தான்புலின் மத்தியப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக துருக்கிய அதிகாரிகள் கூறினர். பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானோர் தண்டிக்கப்படுவர் என்று துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்டோவான் தெரிவித்தார்.
தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்துவிட்டதாக துருக்கியின் உள்நாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார். தாக்குதலுக்கு முன்பு அந்த இடத்தில் இருந்த இருக்கையில் பெண் ஒருவர் 40 நிமிடங்களுக்கும் அதிக நேரம் அமர்ந்
திருந்திருந்தாக அதிகாரிகள் கூறினர். அவர் அந்த இடத்தைவிட்டு புறப்பட்டதும் வெடிகுண்டு வெடித்தது. இதற்கிடையே, குர்திஸ்தான் பிரிவினைவாத அமைப்பான பிகேகே இந்தத் தாக்குதலை நடத்தியதாக துருக்கி குற்றம் சாட்டுகிறது. இருப்பினும், தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இஸ்தான்புலின் மையப் பகுதியின் நிகழ்ந்த இந்தத் தாக்குதலால் துருக்கியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தத் தாக்கு
தலுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

