பாலித் தீவிலிருந்து
இர்ஷாத் முஹம்மது
துணைச் செய்தி ஆசிரியர்
ஜி20 உச்சநிலை மாநாட்டை நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்த இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, 2023 மேலும் மோசமான ஆண்டாக மாறக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
உரம் சார்ந்த பிரச்சினை குறித்து தமது தொடக்க உரையில் வலியுறுத்திப் பேசிய திரு விடோடோ, நியாயமான விலையில் போதுமான உரம் கிடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் 2023ஆம் ஆண்டு மேலும் மோசமான ஆண்டாக அமையக்கூடும் என்று குறிப்பிட்டார். தற்போதுள்ள அதிகப்படியான உணவு விலைகள், உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடும் என்று திரு விடோடோ சூளுரைத்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய பொருளியல் மீட்சிக்கான உந்துசக்தியாக ஜி20 இருக்கவேண்டும் என்று இந்தோனீசியா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"வேறு வழியில்லை. ஒத்துழைப்பு மூலம்தான் உலகை நாம் காப்பாற்றமுடியும்," என்றார் அவர்.
"உலகை மற்றுமொரு பனிப் போருக்குள் தள்ளக்கூடாது. உலகைப் பிளவுபடுத்திவிடக்கூடாது," என்றும் அவர் சொன்னார்.
அமைதிக்கான உக்ரேன் அதிபரின் பத்து அம்சத் திட்டம்
அணுவாயுதப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, ரஷ்யப் போர் குற்றச்சாட்டுக்கு நீதி, மாஸ்கோவுடன் இறுதி அமைதி ஒப்பந்தம் உள்ளிட்ட பத்து அம்சங்கள் அடங்கிய அமைதிக்கான திட்டத்தை முன்வைத்தார் உக்ரேன் அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி.
காணொளி மூலம் ஜி20 உச்சநிலை மாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர், ஜி20 தலைவர்கள் அவர்களின் முழு முதல் சக்தியைக் கொண்டு ரஷ்யாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களைக் கைவிட வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அமைதியை நிலைநாட்ட இதுவே சரியான நேரம் என்று கூறிய ஸெலென்ஸ்கி, தமது நாட்டில் போரை நிறுத்துவதற்கான திட்டத்திற்குப் பின்னால் 'ஜி19' உலகத் தலைவர்களையும் தோள்கொடுக்க அழைப்பு விடுத்தார்.
மாஸ்கோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியின் விலைக்கு உச்சவரம்பு விதிக்கவும் அவர் கோரினார்.
குளிர்காலத்தை நெருங்கும் தற்சமயம் உக்ரேனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான வெடிகுண்டு தாக்குதல்களை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்றார்.
ஜி20 உச்சநிலை மாநாட்டில் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு குறித்தே பெரும்பாலான தலைவர்கள் பேசினர்.
உச்சநிலை மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின் வரவில்லை. அவரைப் பிரதிநிதித்து நீண்டகால வெளியுறவு அமைச்சர் செர்கி லவ்ரொவ் வந்திருந்தார். வேறெந்த நாட்டுத் தலைவரும் அவருடன் எந்தத் தொடர்பும் கொள்ளவில்லை.
ஸெலென்ஸ்கியின் காணொளி உரையின்போது லவ்ரொவ் முழுமையாக அரங்கிலேயே அமர்ந்து பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார். அரங்கமும் நிறைந்திருந்தது. அதேபோல் லவ்ரொவ் பேசியபோது பெரியளவில் வெளிநடப்புகள் இல்லை. ஒன்பது மாதங்களாக நீடிக்கும் இந்தப் போரை லவ்ரொவ் ஆதரித்தே பேசினார்.
இதற்கிடையே, இன்று முடிவுக்கு வரும் உச்சநிலை மாநாட்டில் கூட்டறிக்கை கையெழுத்தாகுமா என்ற சந்தேகம் நிலவி வந்த வேளையில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அது தயாராகியுள்ளதாகக் கூறப்பட்டது.
அந்தக் கூட்டறிக்கையில் பெரும்பாலான தலைவர்கள் உக்ரேன் மீதான போரைச் சாடியுள்ளதையும் மக்கள் அதிகளவில் தவித்துவருவதை வலியுறுத்தியுள்ளதையும் பதிவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை ரஷ்யா அதைச் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறிவருகிறது. அதனால் அந்தப் பத்திரத்தில் ரஷ்யப் போர் என்று குறிப்பிடப்படவில்லை.
உக்ரேன் மீதான போரை எதிர்த்து ஒலிக்கும் உலகக் குரல்
உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பை எதிர்த்து உலகத் தலைவர்கள் ஒருங்கிணைந்த வகையில் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, போர் நிற்காவிட்டால் உலகம் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று கூறினார்.
"போர் நிற்காவிட்டால் தற்கால, எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பொறுப்புடன் செயல்படுவது கடினம்," என்றார்.
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி, "ரஷ்யாவின் செயல்பாடுகள் அனைவரையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றன," என்றார்.
உலகளாவிய எதிர்ப்பின் எதிரொலி ரஷ்ய அரசுக்குக் கேட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதம் ஏந்திய தாக்குதல்களைக் களைந்து நட்புறவின் பாதையில் திரும்புவதற்கான வழியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றார். எரிசக்தி விநியோகத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதை ஊக்குவிக்கவேண்டாம் என்று மற்ற நாடுகளை திரு மோடி கேட்டுக்கொண்டார்.

