கோலாலம்பூர்: மலேசியாவின் 578 வாக்களிப்பு நிலையங்களுக்கு நேற்று மொத்தம் 224,828 அதிகாரிகள் வாக்களிக்கச் சென்றனர். வரும் 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ள 15வது பொதுத் தேர்தல், புகாயா இடைத்தேர்தல் ஆகியவற்றுக்காக முன்கூட்டியே வாக்களித்தல் நேற்றுக் காலை 8 மணிக்குத் தொடங்கியது.
மாநிலக் காவல் அணித் தலைமையகங்கள், மாவட்ட காவல் தலைமையகங்கள், ராணுவ முகாம்கள் ஆகியவற்றில் ராணுவ அதிகாரிகள், பொதுச் செயல்பாட்டுப் படை அதிகாரிகள் ஆகியோருடன் அவர்களின் வாழ்க்கைத்துணையர் வாக்களித்ததாக தேர்தல் ஆணையச் செயலாளர் இக்மால்ருதீன் இஷாக் தெரிவித்தார்.
வாக்குச்சீட்டுகள் வரும் சனிக்கிழமையன்று மாலை 4 மணி முதல் எண்ணப்படும்,
இதற்கிடையே, கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கான வழிகாட்டுதல்களை மலேசியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதாக 'த ஸ்டார்' செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டோர் மற்ற வாக்காளர்களுடன் கலந்திராது சுகாதார அமைச்சு அதிகாரிகளின் துணையுடன் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க முன்னுரிமை பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
வாக்குச் சாவடிகளின் நுழைவாயிலில் தங்களின் தொற்று குறித்து வாக்காளர்கள் சுகாதார அமைச்சு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அத்துடன் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருப்பதும் அவசியம். இருப்பினும் அடையாளத்தை உறுதிப்படுத்த அவர்களின் முகக்கவசத்தைத் தற்காலிகமாக இறக்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில், வாக்களிக்கப் பயன்படுத்தும் மையில் விரலை விடுவதற்கு முன்னும் பின்னும் கை சுத்திகரிப்பானை கொவிட்-19 நோயாளிகள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இதற்கிடையே பத்தில் எட்டு மலேசியர்கள் நவம்பர் 19 தேர்தலில் வாக்களிப்பர் என்று சிலாங்கூர் அரசாங்கம் தொடர்புடைய நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மலேசியப் பொதுத் தேர்தலில் இம்முறை வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தாங்கள் வாக்களிக்கப் போவதில்லை என்று 4.6 விழுக்காட்டினர் தெரிவித்திருந்தனர்.

