மூன்று திடமான விளைவுகள்

மூன்று திடமான விளைவுகள்

2 mins read
c8737a43-74b5-445f-a7ee-982b500adead
-

நுசா டுவா, இந்­தோ­னீ­சியா: ஜி20 உச்­ச­நிலை மாநாடு நேற்­றோடு முடி­வ­டைந்த நிலை­யில், மூன்று திட­மான பலன்­களை அடைய முடிந்­த­தாக இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ குறிப்­பிட்­டார். சுகா­தா­ரம், எரி­சக்தி மாற்­றம், நிதி ஆகிய அம்­சங்­களை அவர் குறிப்­பிட்­டுப் பேசி­யி­ருந்­தார்.

இந்­தோ­னீ­சி­யா­வின் தலை­மை­யில் கொள்­ளை­நோய் நிதித் திட்­டம் ஒன்­றைத் தொடங்க நாடு­கள் ஒப்­பு­தல் அளித்­தன. இந்த நிதி இடை­யீட்­டுத் திட்­டத்­தின்­வழி எதிர்­கா­லக் கொள்­ளை­நோய்­க­ளுக்கு நாடு­க­ளைத் தயார்­ப­டுத்த முடி­யும். இந்த நிதிக்கு மொத்­தம் சுமார் 1.5 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$2.05 பி.) வழங்க உறுப்பு நாடு­களும் அனைத்­து­லக அமைப்­பு­களும் உறு­தி­ய­ளித்­தன.

குறைந்த வரு­மான நாடு­கள், சிறிய நாடு­கள், எளி­தில் பாதிப்­படை­யக்­கூ­டிய நடுத்­தர வரு­மான நாடு­கள் போன்­ற­வற்­றுக்கு உத­வும் வகை­யில் அற­நி­தித் திட்­டம் ஒன்­றைத் தொடங்­கு­வதை இரண்­டாவது திட­மான பல­னாக அதி­பர் விடோடோ குறிப்­பிட்­டார்.

கொள்­ளை­நோய், பரு­வ­நிலை மாற்­றம் போன்ற விவ­கா­ரங்­களை உள்­ள­டக்­கிய பெரி­த­ள­வி­லான பொரு­ளி­யல் பிரச்­சி­னை­கள் எது­வா­யி­னும் அவற்­றைச் சமா­ளிக்க அற­நி­தித் திட்­டம் கைகொ­டுக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய நாடு­கள் அனைத்­தும் சேர்ந்து மீள்­வ­தற்­கும் வலு­வாக மீள்­வ­தற்­கும் ஆத­ரவு தர நாங்­கள் கடப்­பாடு கொண்­டுள்­ளோம். 81.6 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் மதிப்­பில் உதவி வழங்­கப்­படும் என்று உறுதி­ய­ளிக்­கி­றோம்," என்று ஜி20 பாலி தலை­வர்­கள் உறு­தி­ய­ளிப்பு ஆவ­ணத்­தில் குறிப்­பி­டப்­பட்­டது.

அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பரு­வ­நிலை வல்­ல­ர­சா­கக் கரு­தப்­படும் இந்­தோ­னீ­சியா, புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்திக்கு மாறு­வ­தைத் துரி­தப்­படுத்த அமெ­ரிக்­கா­வும் ஜப்­பா­னும் நிதி அளிப்­பதே மூன்­றா­வது பல­னா­கக் குறிப்­பி­டப்­பட்­டது. பொதுத் துறை, தனி­யார் துறை ஆகி­ய­வற்­றின் மூலம் 20 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் இத்­திட்­டத்­திற்­காக வழங்­கப்­படும்.

"இவற்­றைத் தவிர மற்ற விளைவு­களும் உண்டு," என்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கூறி­னார் திரு விடோடோ.

உற்­பத்­தித் திற­னைப் பெருக்க, விவ­சா­யத்­தி­லும் உண­வுக் கட்­டமைப்­பு­க­ளி­லும் மின்­னி­லக்­கப் புத்­தாக்­கத்­தைப் புகுத்­து­வதை ஆத­ரிக்­கும் கூட்­டுக் கடப்­பாடு அவற்­றில் ஒன்று என்­றார் அவர்.

"ஜி20 என்­பது பொரு­ளி­யல், நிதி, மேம்­பாடு தொடர்­பான ஒரு மாநாடு. அது அர­சி­யல் சார்­பான மாநாடு அல்ல. அதை அவ்­வாறு மாற்­றி­விட வேண்­டாம்," என்று அறி­வு­றுத்தி உள்­ளார் அதி­பர் விடோடோ. இதற்­கி­டையே, உக்­ரேனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்து வரு­வது தொடர்­பில் ஜி20 தலை­வர்­களில் பெரும்­பா­லா­னோர் தங்­களின் வருத்­தத்­தைத் தெரி­வித்­தும் இருந்­த­னர். ரஷ்யா அதன் படை­களை நிபந்­த­னை­க­ளின்றி மீட்­டுக்­கொள்ள வேண்­டும் எனக் கண்­டனம் தெரி­விக்­கும் உறு­தி­ய­ளிப்பை அவர்­கள் ஏற்­றுக்­கொண்­ட­னர்.