வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், 76, 2024ஆம் ஆண்டில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதிபர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தேவையான ஆவணங்களை மத்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பின்னர் அங்கு திரண்டிருந்த தம் ஆதரவாளர்களுடன் பேசினார் திரு டிரம்ப்.
கடந்த வார காங்கிரஸ் இடைத் தேர்தலின் வருத்தமளிக்கும் முடிவுகளுக்கு திரு டிரம்ப் காரணம் எனக் குடியரசுக் கட்சியினர் பலர் சாடி வருகின்றனர். இதையடுத்து, திரு டிரம்ப் தன் முடிவு குறித்து அறிவித்திருந்தார்.
"மீண்டும் அமெரிக்காவைச் சிறப்பான நாடாக்க, அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிட விரும்புவதை அறிவிக்கிறேன்," என்று நேற்றுக் கூறினார் திரு டிரம்ப்.
"அமெரிக்காவின் மறுமலர்ச்சி இப்போதிருந்து ஆரம்பம்," என்றார் அவர்.
ஈராண்டுக்குமுன் அமெரிக்கா ஒரு சிறந்த நாடாக இருந்தது எனத் தற்போதைய அமெரிக்க அதிபரான ஜோ பைடனின் ஆட்சி குறித்தும் விமர்சித்துப் பேசினார்.
இதற்குப் பதிலடியாக ஜி20 உச்சநிலை மாநாட்டுக்காக பாலித் தீவு சென்றுள்ள திரு பைடன், "டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவுக்குத் தவறு இழைத்தார்," என்று டுவிட்டரில் பதிவிட்டார்.
திரு டிரம்ப் கிட்டத்தட்ட ஈராண்டுக்கு முன்னதாகவே தம் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தம் தந்தையின் 2024 அதிபர் தேர்தல் பிரசாரத்தில் பங்குபெறப் போவதில்லை என்று திரு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் கூறியுள்ளார்.

