சிட்னி: முழு கட்டடங்களைப் பெயர்த்து அடித்துக்கொண்டு போகும் அளவுக்கு ஆஸ்திரேலியாவின் இயுகோவ்ரா நகரில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நெருக்கடி நிர்வாக அதிகாரிகள் நேற்று இதை நாசம் செய்யும் 'தண்ணீர் சுவர்' என்று வர்ணித்திருந்தனர்.
சேறு கலந்த நீருக்கடியில் சேதம் எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தற்போது மதிப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்பகுதி மக்கள் தங்களின் வீட்டுக் கூரைகள்மீது கூடி, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்களின் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வீடுகள், கார்கள், உடைமைகள் என மக்களின் மொத்த சொத்துகளையும் அழிக்கும் அளவுக்கு எங்கும் ஒரே தண்ணீரும் சேறுமாகக் காணப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை காரணமாக வயாங்காலா அணை நிரம்பி, தண்ணீர் சுவரைக் கடந்துவரத் தொடங்கிவிட்டது. இயுகோவ்ரா அருகிலுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏறத்தாழ 230,000 மெகாலிட்டர் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் வெள்ளச் சம்பவங்கள் மேலும் கடுமையாக அமையலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

