நாளை நடைபெறும் மலேசியப் பொதுத் தேர்தலில் 42 வயது ராஜலட்சுமி சுப்பையா வாக்களிக்கிறார்.
பொதுத் தேர்தலில் இவர் வாக்களிப்பது இதுவே முதல்முறை. மலாக்கா மாநிலத்தில் வளர்ந்து தொடக்கநிலை, உயர்நிலை, உயர்கல்வி ஆகியவற்றை முடித்தபோதிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இவருக்கு மலேசியக் குடியுரிமை கிடைத்தது.
இவரது தந்தை மலேசியர், தாயார் இந்திய நாட்டவர். தமது தாயார் இந்தியாவில் உள்ள அவரது கிராமத்துக்குச் சென்று தம்மைப் பெற்றெடுத்ததாக ராஜலட்சுமி தெரிவித்தார்.
தமது பிறப்பை மலேசியாவில் பதிவு செய்யும் முக்கியத்துவத்தை தமது பெற்றோர் அப்போது அறிந்திருக்கவில்லை என்றார் இவர்.
நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு, தமக்கு மலேசியக் குடியுரிமை கிடைத்ததாக இவர் கூறினார். ராஜலட்சுமியைப் போலவே அவரது மகளான 19 வயது கீர்த்திகா குமரேந்திரனும் நாளை முதல்முறையாக வாக்களிக்கிறார்.


