கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.
முன் இல்லாத அளவில் இம்முறை ஆக அதிகமான வேட்
பாளர்களிடையே பன்முனைப் போட்டி நிலவுகிறது.
பிரதான கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் அதிகம் இருக்காது என்றும் நம்பப்படுகிறது.
கூட்டணிகளின் பிரதமர் வேட்பாளர்கள்
இதற்கிடையே, மலேசியாவின் அடுத்த பிரதமராவதே தேசிய முன்னணியின் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பக்கத்தான் ஹரப்பானின் அன்வார் இப்ராஹிம், பெரிக்காத்தான் நேஷனலின் முகைதீன் யாசின் ஆகியோரின் இலக்கு.
இந்தப் பட்டியலில் மலேசியாவின் முன்னாள் பிரதமரும் கெராக்கான் தானா ஆயர் கூட்டணியின் தலைவருமான 97 வயது டாக்டர் மகாதீர் முகம்மதும் சேர்ந்துள்ளார்.
222 நாடாளுமன்றத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 112 தொகுதிகளைக் கைப்பற்றும் கூட்டணி அரசாங்கம் அமைக்கும்.
கடுமையான போட்டிகளை எதிர்பார்க்கும் தொகுதிகள்
அனைவரின் பார்வையும் பேராக்கின் தாம்புன் தொகுதியை நோக்கி இருக்கிறது. அங்கு அன்வார் இப்ராஹிம் போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனலின் அகமது ஃபைசால் அசுமு போட்டியிடுகிறார். 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தாம்புன் தொகுதியை அகமது ஃபைசால் கைப்பற்றினார்.
பேராக்கின் பகான் டத்தோவில் அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடியும் பாஹாங்கின் பெரா தொகுதியில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் களமிறங்குகின்றனர்.
வழக்கமாக நெகிரி செம்பிலானின் ரெம்பாவ் தொகுதியில்
போட்டியிட்டு வெற்றிக் கனியைச் சுவைத்து வந்த கைரி ஜமாலுதீன், இம்முறை சிலாங்கூரின் சுங்கை புலோ தொகுதியில் போட்டியிடுகிறார். இன்றைய தேர்தல் முடிவுகள் தமது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மறுமலர்ச்சி கனவுடன் மஇகா
2008ஆம் ஆண்டிலிருந்து சரிவை எதிர்நோக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் இம்முறை எப்படியாவது உயிர்த்தெழ வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.
இருப்பினும், பேராக்கின் சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சித் தலைவர் ச. விக்னேஸ்வரனுக்கும் தாப்பா தொகுதியில் போட்டியிடும் துணைத் தலைவர் எம். சரவணனுக்கும் கடுமையான போட்டி காத்திருக்கிறது.
இவர்களையும் சேர்த்து மஇகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா
என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

