குவாந்தான்: இனவாதம், சமயத் தீவிரவாதத்தை எதிர்க்குமாறு மலேசியர்களுக்கு கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
அவற்றை எதிர்கொள்ளாவிடில் அவை விஸ்வரூபம் எடுத்து அபாய கரமான நிலையை எட்டிவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். அவ்வாறு ஒருநிலை ஏற்பட்டால் அது மலேசியாவைச் சீர்
குலைத்துவிடும் என்று அன்வார் கூறினார். தமக்கு எதிராகக் களமிறங்கும் கட்சிகள் இனத்தை அடிப்படையாகக் கொண்டு
மக்களிடையே பீதியையும் பிளவையும் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
"நான் ஒரு முஸ்லிம். மற்ற இனங்களையும் சமயங்களையும் வெறுக்க இஸ்லாம் எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. இனவாதம், சமயத் தீவிரவாதத்தை இப்போதே எதிர்கொண்டு களை எடுக்காவிட்டால் நாட்டுக்குப் பெரும் தீங்கை இழைத்துவிடும்," என்று பாஹாங் மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் அன்வார் தெரிவித்தார்.
"இதைச் சாதாராணமாக
எடுத்துக்கொள்ளாதீர்கள்.
"இப்போதே அதற்கு எதிரான நிலைப்பாட்டை அனைவரும் கொண்டிருக்க வேண்டும். மலேசியர்களின் ஒற்றுமையைச் சீர்
குலைக்கும் இனவாத, சமயத் தீவிரவாதப் போக்கிற்கு எதிராக மலேசியர்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்," என்றார் அன்வார்.
இனவாதத்தைத் தூண்டும் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்ததை
அன்வார் சுட்டிக்காட்டினர்.
தமக்கு வாய்ப்பும் அதிகாரமும் இருந்தால் மலேசியாவில் உள்ள மலாய்க்காரர் அல்லாத மற்ற இனத்தவர்களைக் கொல்வது நிச்சயம் என்று அந்த நபர் மிரட்டி
இருந்தார். வெறுப்புணர்வைப் பரப்பும் அரசியல்வாதிகளை நிராகரித்து அவர்களது அரசியல் பயணத்தை மலேசியர்கள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார் அன்வார்.

