பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதே பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் இலக்கு என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்திருந்தார்.
இதற்கு பக்கத்தான் ஹரப்
பானிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முகைதீன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவரால் ஆதாரம் காட்ட முடியுமா என்று பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயகச் செயல் கட்சியின் பழம்பெரும் அரசியல்வாதியான லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.
"பக்கத்தான் ஹரப்பான் யூதர்
களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சாதகமாகச் செயல்படும் கூட்டணி என்கிறார் முகைதீன்.
"பக்கத்தான் ஹரப்பானைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மலேசியாவை ஆட்சி செய்ய யூதர்களும் கிறிஸ்துவர்களும் சதித்திட்டம் தீட்டுவதாக அவர் தெரிவித்தார்.
"தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் அவர் பொய் கூறத் தொடங்கிவிட்டார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது," என்று லிம் கிட் சியாங் சாடினார்.
முகைதீனின் இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கெஅடிலான் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் ரஃபிசி ராம்லி நேற்று தெரிவித்தார். முகைதீனின் கருத்துகள் வெறுப்புணர்வைத் தூண்டக் கூடியவை என்று பக்கத்தான் ஹரப்பான் தெரிவித்தது.

